திங்கள், 16 செப்டம்பர், 2019

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பண்மடங்கு உயர வாய்ப்பு..!

credit ns7.tv
Image
உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவணமான சவுதி அரேபியாவின் ’அராம்கோ’விற்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் தாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான, சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் தீவிரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. சவுதி அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் அந்நாடு முழுவதும் எண்ணெய் வயல்களையும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் நடத்தி வருகிறது. இந்நிறுவனம், உலகின் 10% கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அராம்கோவிற்கு சொந்தமான அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயல் மீதும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த தாக்குதல்களுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களே பொறுப்பேற்றுள்ளனர். 4 வருடங்களுக்கு மேலாக ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரின் அதி தீவிர தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் ஐம்பது சதவிகித எண்ணெய் வளத்தை இந்த தாக்குதல் அழித்துள்ளது என்பது தான் ஆபத்தான தகவல். நாள் ஒன்றிற்கு 9.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்த சவுதி அரேபியா, தற்போது அதில் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை இழந்திருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களுக்கான காரணங்களும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படப்போகும் மாற்றங்களும் தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. 
Saudi Attack
ஏமன் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதியின் படைக்கும்,  ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் போரில் ஏமன் அரசு படைகளுக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. தனது படைகளை கொண்டு ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித்தாக்குதல்களை நடத்தி வருகிறது சவுதி அரேபியா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் இந்த தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்துவதற்கு ஈரான் துணை நின்றுள்ளதாக அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது. 
தமது 80% கச்சா எண்ணெய் தேவையை எண்ணெய் வள நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்துக்கொள்ளும் இந்தியா, இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடு சவுதி அரேபியா என்ற நிலையில், இது இந்தியாவை எந்த அளவிற்கு பாதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
India Imports Oil
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு ஒரு டாலர் அதிகரித்தால் கூட, அது இந்தியாவின் ஒரு ஆண்டிற்கான கச்சா எண்ணெய் செலவை 10,000 கோடியாக உயர்த்தும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு, சவுதி அரேபியாவின் எண்ணெய் வளங்கள் தாக்கப்பட்டிருப்பது கூடுதல் சுமையாகிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.