credit ns7.tv
சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக அறிவித்த மறுநாளே இறுக்கமான உடைகள் அணிபவர்களுக்கும், பொது இடங்களில் முத்தம் கொடுப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவை சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
ஆண்களும், பெண்களும் நவநாகரிக ஆடைகளை அணிந்துகொள்ள முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்றாலும் அவர்களின் உடை கண்ணியம்மிக்கதாக இருக்க வேண்டும், பொது இடங்களில் அன்பை பரிமாறுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது, இது போன்ற 19 குற்றச் செயல்கள் கண்டறியப்பட்டுள்ளது, இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. இருப்பினும் அபராதத் தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை.
இது போன்ற விதிகளை சுற்றுலா பயணிகளுக்கு நம் நாட்டை பற்றிய சட்டதிட்டங்களை புரிய வைக்கும், அவர்களும் பொது நடத்தைக்கு இணங்கி செயல்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 49 நாடுகளை சேர்ந்தவர்கள் இனி ஆன்லைன் வழியாக சவுதி அரேபிய சுற்றுலா விசாக்களை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை சவுதி அரேபிய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டதை தொடர்ந்து பொது நடத்தைக்கு அபராதம் விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெயை மட்டுமே நம்பியிருக்கும் சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை சுற்றுலாத்துறை வசம் திருப்பும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டிற்குள் சவுதி அரேபியாவை மாற்று பொருளாதாரத்திற்கு நகர்த்திச் செல்லும் வகையில் பல புதிய அறிவிப்புகளை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டு வருகிறார் என்பது நினைவுகூறத்தக்கது.