வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இந்தியாவின் இளம் தொழிலதிபராக உருவெடுத்த “OYO” ரிதேஷ் அகர்வால்!

Image
இந்தியாவின் மிக இளம் தொழிலதிபராக ஓயோ ரூம்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரிதேஷ் அகர்வால் தேர்வாகியுள்ளார்.
IIFL India Hurun India Rich List of 2019 பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் ஓயோ ரூம்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான 25 வயதே ஆன ரிதேஷ் அகர்வால், 7500 கோடி சொத்துமதிப்புடன் இந்தியாவின் இளம் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரது சொத்துமதிப்பு இந்த ஆண்டு 188% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் அதிக வளர்ச்சியை சந்தித்த 4வது தொழிலதிபராக திகழ்கிறார் ரிதேஷ் அகர்வால்.
40 வயதிற்குட்பட்ட பணக்கார தொழிலதிபர்களில் media.net நிறுவனரான, 37 வயதான திவ்யங்க் துராகியா 13,000 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இளம் பணக்கார தொழிலதிபராக ஓலா கேப்ஸ் நிறுவனர்களில் ஒருவரான 33 வயதான அன்கிட் பாதி 1,400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தேர்வாகியுள்ளார். இவர் மட்டுமல்லாமல் ஸ்விக்கியின் மற்றொரு நிறுவனரான 33 வயதான ஸ்ரீஹர்ஷா மஜேட்டி 1,400 கோடி ரூபாய் சொத்துமதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஸ் அம்பானி 3,80,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். 1,86,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் எஸ்.பி.ஹிந்துஜா & Family இரண்டாவது
இடத்தையும், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி 1,17,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும், 1,07,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் எல்.என் மிட்டல் & Family நான்காவது இடத்தையும், கவுதம் அதானி & family 94,500 கோடி ரூபாய் சொத்துகளுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
1000 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2016ம் ஆண்டு 617ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 953 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு 831 ஆக இருந்தது. ஆனால், அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பில்லியனர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை 141ல் இருந்து 138 ஆக குறைந்துள்ளது.
முதல் 25 இடங்களை பிடித்துள்ள தொழிலதிபர்களின் சொத்துமதிப்பு இந்தியாவின் ஜிடிபியில் பத்து சதவீதமாகும். 953 பேரின் சொத்துமதிப்பு இந்தியாவின் ஜிடிபி-யில் 27 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தொழிலதிபர்களின் சொத்துக்களின் மதிப்பு இந்த ஆண்டு 2 சதவீதம் வளர்ந்திருக்கிறது. ஆனால் சராசரியை பொறுத்தவரை, கடந்த ஆண்டைக்காட்டிலும் 11% குறைந்திருக்கிறது. 
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர்களில் 26 சதவீதம் பேர் அதாவது 246 பேர் மும்பையை தலைமையகமாக கொண்டவர்கள். மேலும், டெல்லியைச் சேர்ந்த 175 தொழிலதிபர்களும், பெங்களூருவைச் சேர்ந்த 77 பேரும் இடம்பிடித்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் 82 பேர் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதில் 76 பேர் சுயமாக முன்னேறியவர்கள் ஆவர். வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர்களில் 31 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிற்கு அடுத்து, அரபு நாடுகளைச்சேர்ந்தவர்களும், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர்.

பெண் தொழிலதிபர்களை பொறுத்தவரை இந்த பட்டியலில் 152 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் சராசரி வயது 56. இவர்களில் 31400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இளம் தொழிலதிபராக, ஹெச்சிஎல் நிறுவனத்தின், 37வயதான ரோஷினி நாடார் இடம்பெற்றுள்ளார். இவரையடுத்து, கோத்ரேஜ் குழுமத்தின் 68 வயதான ஸ்மிதா வி க்ரிஷ்ணா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பயோகான் நிறுவனத்தின் கிரன் மசும்தார் ஷா 18500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சுயமாக முன்னேறிய தொழிலதிபராக உருவெடுத்துள்ளார்.
இவர்கள் மட்டுமல்லாமல்,  ஸோமேட்டோ-வின் தீபிந்தர் கோயல், ஃப்ளிப்கார்ட் சச்சின் பன்சால், அமோத் மாள்வியா, வைபவ் குப்தா மற்றும் சுஜூத் குப்தா ஆகியோரும், வியு டெக்னாலஜிஸ்-ன் தேவிதா சரஃப் மற்றும் ரிவிகோ நிறுவனத்தின் தீபக் கார்க் ஆகியோர் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 40 வயதுக்குட்பட்ட தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 4,200 கோடி ரூபாயாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv