செவ்வாய், 17 செப்டம்பர், 2019

பெரியார் பாசம்...!


நடிகர்கள் அரசியல் பேசுவதும், அரசியலுக்கு வருவதும் நாடுமுழுக்க நடக்கும் நிகழ்வுதான். ஆனால், கொள்கைப் பிடிப்போடு தமிழ்ச் சமூகத்திற்காக உழைத்த பெரியார் பற்றியும் அவரது கொள்கை பற்றியும் பொதுவெளியில் நடிகர்கள் பேசுவது தமிழகத்தில் மட்டுமே காண முடிந்த ஒன்று.
சமீபத்தில் காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, கோட்சே காந்தியை சுட்ட பின்னர் பெரியார் என்ன நினைத்தார் என்பதைத்தான் பேசியிருக்கிறார். காந்தியை கோட்சே சுட்ட செய்தி அறிந்ததும், கோட்சேவின் துப்பாக்கியை உடையுங்கள் என்று சொன்னதோடு கோட்சே வெறும் துப்பாக்கிதான் என்று பெரியார் கூறியதாகவும் சூர்யா குறிப்பிட்டார். மேலும், ஒரு நிகழ்வுக்குப் பின் ஒரு சித்தாந்தம் இருப்பதாகவும் பெரியார் கூறியிருக்கிறார் என்று பேசியிருந்தார் சூர்யா.
விஜய் சேதுபதி - பெரியார்: 
பெரியார் குறித்து நடிகர்கள் பேசுவது புதிதல்ல. இதற்கு முன்னரும் பல தமிழ் நடிகர்கள் பெரியார் தொடர்பாக தங்கள் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர். காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்துச் சொன்ன நடிகர் விஜய் சேதுபதி, அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் யாரும் யார் மீது வேண்டுமானாலும் அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆளுமை செலுத்த முடியாது என்ற பெரியாரின் கருத்தையும் மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். 
கொந்தளித்த ரஜினி, கமல்:
கடந்த ஆண்டு பெரியார் சிலையை உடைப்போம் என்று ஹெச்.ராஜாவின் அட்மின் சமூகவலைத்தளத்தில் ஏற்படுத்திய சர்ச்சையின்போது, ஒட்டுமொத்த தமிழ்திரையுலகமே பொங்கி எழுந்தது. பெரியார் தொடர்பான இந்தக் கருத்து காட்டுமிராண்டித்தனமானது என்று நடிகர் ரஜினிகாந்தும், கீழ்த்தரமானது என்று நடிகர் கமலஹாசனும் பேசியிருந்தனர். 
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சத்யராஜ்:
இந்த நிகழ்வு நடந்த சில மாதங்களில் நடிகர் சிம்பு நடிப்பில், மதன் கார்க்கி வரிகளில் பெரியார் குத்து பாடல் வெளியானது. இதற்காகவே சிம்புவிற்கு 2019ம் ஆண்டுக்கான பெரியார் விருதும் வழங்கப்பட்டது.  பெரியார் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் குத்து. அதனால் இந்த பாடலுக்கு பெரியார் குத்து என்று பெயர் வைத்தோம் என்றும் பெரியாரின் பெருமைகளைச் சொன்னார் சிம்பு. பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜ், தானாக முன் வந்து பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நடித்திருந்தார். மேலும், தான் ஏறும் எல்லா மேடைகளிலும் பெரியாரின் கருத்துக்களை இன்றும் முழங்கிக்கொண்டிருக்கிறார்.  
90-ஸ் திரைப்படத்திலேயே பெரியாரின் கருத்துகள்:
இது மட்டுமின்றி, 1960களிலேயே திரைப்படங்களிலேயே கருணாநிதி, எம்ஜிஆர். எம்.ஆர். ராதா உள்ளிட்டோரும் பெரியாரின் கருத்துக்களை பேசியிருப்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. சாதீயக் கொடுமைகளால் கட்டுண்டு கிடந்த தமிழகத்தை சாதிமறுப்பு,  சுயமரியாதை, பெண் விடுதலை என்று பேச வைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளையும் கருத்துக்களையும் திரைத்துறையினர் இன்றும் பல தருணங்களில் பொதுவெளியில்  பேசிவருவது இந்த தருணத்தில் அவசியமானது என்றே அரசியல் நோக்கர்களால் கருதுகின்றனர். 

credit ns7.tv