ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கர்நாடகாவில் 15தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க இந்த இடைத் தேர்தலில், நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த 64 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. அவற்றில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கும், இன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணிக்கு எதிராக, போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேர், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 15 பேரின் தொகுதிகளில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு, அங்கு எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. எடியூரப்பாவிற்கு தற்போது சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவைச் சேர்த்து, 106 எம்.எல்.ஏக்களின் ஆதரவே உள்ளது. 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதால், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான பலம் 113 ஆக உயரும். எனவே இடைத் தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில், குறைந்தபட்சம் 7 தொகுதிகளை, கைப்பற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. 
இதற்கிடையே, இடைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என, மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா திட்டவட்டமாக கூறியுள்ளார். ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக பதவி வகித்த குமாரசாமி, கசப்பான அனுபவங்களையே சந்தித்தாகக் கூறிய தேவகவுடா, 15 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும் என்றார். 


credit ns7.tv