வியாழன், 26 செப்டம்பர், 2019

அந்தமான் - நிகோபர் தீவுகள் குறித்து ஐ.நா அதிர்ச்சி தகவல்..

credit ns7.tv
Image
அந்தமான் - நிகோபர் தீவுகள் இன்னும் சில ஆண்டுகளில் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ஐநா. 
புவி வெப்பமயமாவதால் உருவாகும் பருவநிலை மாற்றம் உலகை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்றே சொல்லலாம். இதை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் பல முயற்சிகளை எடுத்தாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீமையின் கையே ஓங்கியிருக்கிறது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுக்குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எழில் கொஞ்சும் தீவு நகரமான அந்தமான் - நிகோபர் இன்னும் சில ஆண்டுகளில் மனித இனம் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
புவி வெப்பமயமாதல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை மேலும் 2 டிகிரி அதிகரிக்கும் என்றும், பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் மேலும் உயரும் என எச்சரித்துள்ளது ஐநா. 2100ம் ஆண்டு 30 முதல் 60 சென்டிமீட்டர் வரை கடல்நீர் மட்டம் உயரலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலின் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கினால் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களும் அதிகரிக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாகவே உலகளவில் 90 சதவீதத்துக்கு அதிகமான வெப்பநிலையை கடல்கள் உள்வாங்கி வந்துள்ளன என்றும், 1993ம் ஆண்டு முதல் கடல்களின் வெப்பநிலை இரு மடங்கு உயர்ந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவதுடன், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களை சந்திக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்து. இதே நிலை நீடித்தால் அந்தமான் - நிகோபர், மாலத்தீவுகள் உட்பட உலகின் சிறிய தீவுக்கூட்டங்களில் வசிக்கும், 6 கோடி மக்களும் வேறிடத்துக்கு புலம் பெயர வேண்டியிருக்கும் என்பதே ஐநாவின் எச்சரிக்கை மணி.