credit ns7 .tv
அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் சரிந்ததில் விபத்து ஏற்பட்டு 23 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, பவானி நகரைச்சேர்ந்தவர் ரவி. இவருக்கு சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். 23 வயதான சுபஸ்ரீ, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். பணி முடிந்து தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை வட்டச்சாலையில் வந்து கொண்டிருந்த போது, அதிமுக பிரமுகர், முன்னாள் கவுன்சிலர் பள்ளிக்கரணை ச.ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைத்திருந்த பேனர் எதிர்பாராத விதமாக சுபஸ்ரீ மீது சாய்ந்தது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த சுபஸ்ரீ தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, சுபஸ்ரீயின் பின்னால் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியது. இந்த கோர விபத்தில் சுபஸ்ரீ படுகாயமடைந்தார். படுகாயமடைந்த சுபஸ்ரீயை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு, இதேபோல எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட வளைவில் மோதி ரகு என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது, சமூகவலைதளங்களில் #WhoKilledRaghu என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரெண்டானது.
இதனையடுத்து, பேனர்கள் வைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அமர்வு, பேனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்ததோடு, உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ, உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ வைக்கக்கூடாது எனவும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள் கட் அவுட்கள் வைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
மேலும், பாதையிலிருந்து தள்ளி மண் பாதையில் தான் அமைக்க வேண்டும். சாலையின் அகலத்தை பொறுத்து, பேனரை அளவாக அமைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு, காவல்துறை மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பிறகே பேனர்களை வைக்கவேண்டும். இதற்காக, கருவூலத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததோடு, விதிமுறைகளை மீறுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' எனவும் அறிவித்தது.
ஆனாலும், சில நாட்களுக்கு மட்டும் பின்பற்றபட்ட அந்த அறிவிப்பு அதன் பின்னர் காற்றில் பறக்கிறது. மீண்டும் பெரிய, பெரிய பேனர்கள், அலங்கார வளைவுகள் சாலைகளை ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த நிலையில், பேனர் வளைவுகளுக்கு மீண்டும் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம், அது அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து பெருமளவு போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்திருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. இந்த பேனர் விவகாரத்திலும் இதை கடுமையாக செயல்படுத்தி பார்க்கலாமோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியாது.
கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து படிப்பிணையை பெற்று அதன்பிறகு அது மீண்டும் நடக்காதவாறு அரசு அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், மீண்டும் மீண்டும் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் அரசுகள் இன்னும் படிப்பிணையை பெறவில்லையோ என்ற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது. பேனர்களால் உயிரிழப்புகளை தடுக்க இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும் என்பது அரசுகளுக்கே வெளிச்சம்.