தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே கல்வியறிவு பெற்றிருந்தனர் என்ற தகவல், கீழடி அகழ்வாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழக தொல்லியல்துறையின், ‘கீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரீகம்' என்ற 4-ம் கட்ட ஆய்வின் தொகுப்பை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார். அந்த புத்தகத்தில், கீழடியில் அகழாய்வு ஆதாரங்களின்படி, தமிழர்களின் பண்பாடு 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உணரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழடியில் நடத்தப்பட்ட 4-ம் கட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல், கி.பி. முதல் நூற்றாண்டு வரை கீழடி வளமான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அறிவியல்ரீதியான களக்கணிப்புகள், தமிழ்-பிராமியின் காலம் மேலும் நூறாண்டு பழமையானதாக கருதச் செய்வதாகவும், அதன்மூலம், கி.மு. 6-ம் நூற்றாண்டில் தமிழர்கள், எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்கிருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறியீடுகளுக்கு அடுத்ததாக கிடைக்கும், தமிழ் பிராமி எழுத்து வடிவத்தை தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் ஆய்வாளர்கள் கூறுவதாகவும், கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிராமி எழுத்துகளில் குவிரன், ஆத(ன்) என்ற ஆட்களின் பெயர்களும், முழுமை பெறாத சில எழுத்துகளுடன் கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
credit ns7.tv