credit ns7.tv
தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இதனை அறிவித்தார். அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இம்மாதம் 30ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 3 என அறிவித்துள்ளார்.
தேர்தல் முடிவு :
இரு தொகுதிகளுக்குமான தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என்றும், அதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 24ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, நாங்குநேரி தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விக்கரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ-வான ராதாமணி உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதிக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் இடைத்தேர்தல்:
இதேபோல், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கும் அக்டோபர் 21ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ல் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 21ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ம் தேதி எண்ணப்படும் என்றும் அவர் கூறினார்.