செவ்வாய், 10 செப்டம்பர், 2019

அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

credit ns7.tv
Image
வெளிநாடு சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.  ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கும் முதலமைச்சருக்கு, 'கட்சி நிதி'யிலிருந்து கொடுப்பதுபோல் விளம்பரங்களை அரசு நிதியிலிருந்து கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்றைக்குள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்கு கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை என்ற அடிப்படை விவரத்தைக் கூட 'விளம்பர மோகத்தில்' மறந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் விளம்பர மேளா இல்லாமல், 2006ம் ஆண்டு முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46,091 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 புள்ளி 21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், 2015ம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காணவில்லை என்றும், அவை கானல் நீராகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; என்றும் 
அந்த முதலீடுகள் மூலம் எத்தனை தொழிற் நிறுவனங்கள் தொடங்கப்பட்டனை என்றும் அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் 'பாராட்டு விழா' நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ள மு.க. ஸ்டாலின், தனது சவாலை முதலமைச்சர் ஏற்றுக் கொள்ளத் தயாரா? என்றும் வினவியுள்ளார்.