புதன், 11 செப்டம்பர், 2019

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு!

Image
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 
சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், தங்கள் கட்சியினர் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகக்  தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திர பாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். 
மேலும், அடக்கு முறைகளை கண்டித்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூர் நோக்கி தொண்டர்களுடன் பேரணியாகச் செல்லப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு, விஜயவாடா அருகில் உள்ள உண்டவல்லி எனும் இடத்தில் உள்ள தமது வீட்டில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 
அவரது மகன் நர லோகேஷ் உள்பட தெலுங்கு தேச கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து, அவரது வீட்டின் முன்பாக கூடிய கட்சித் தொண்டர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே, தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திர பாபு நாயுடு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 12 மணி நேரம் சந்திர பாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

credit ns7.tv