செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் சேகரிக்கப்பட்ட 1000 கிலோ பிளாஸ்டிக்!


Image
கோவா கடற்கரையில் 1000 கிலோவிற்கு மேற்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பிரபலமான சுற்றுலாத்தலம் கோவா. இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். இந்தியாவில் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒருமுறையாவது கோவாவிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. அந்த அளவிற்கு அழகிய மாநிலம் கோவா. ஆனால், கோவாவிற்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளால், கோவா கடற்கரைகள் கடுமையாக மாசுபட்டு வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, கோவாவின் அழகிய கடற்கரைகளை பாழ்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 2019ம் ஆண்டின் கடற்கரை சுத்தம் செய்யும் நாள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கியது. இதில், கோவாவைச் சேர்ந்த தேசிய கடல்சார் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 30வது ஆண்டாக கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் பனாஜி கடற்கரைப் பகுதியில் தொடங்கி நடைபெற்றது. கரன்ஸலெம் கடற்கரையில் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற சுத்தம் செய்யும் பணியில், பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த பணியின் போது, கடற்கரையின் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை சுத்தம் செய்ததில், 1078 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள், காகிதம் உள்ளிட்ட 486 கிலோ பசுமைக் குப்பைகள்,720 கிலோ பாட்டில்கள் மற்றும் 125 உலோக பாட்டில்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகளில் உணவுகளை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் தொப்பிகள், பிளாஸ்டிக் ஸ்பூன், கப், ஸ்ட்ரா, பேனா, பேக், பொம்மைகள் மற்றும் அலங்கார பொருட்கள், சேதமடைந்த மீன் பிடி வலைகள், தார் பாய் சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக்குகளுக்கு நாம் அடிமையாகியிருக்கிறோம். கழிவு மேலாண்மையில் நாம் பிந்தங்கியதன் விளைவு பிளாஸ்டிக் மாசுபாடு, உலகளாவிய தொற்று நோயாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், “பிளாஸ்டிக் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் என்று தெரியும், அவைகள் எங்கிருந்து வருகிறது என்றும் தெரியும். நாம் பிளாஸ்டிக் மாசுபாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகள் உருவாவதற்கான மூலத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இரண்டரை மணி நேரம் சுத்தம் செய்ததில் மட்டும் 1000 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் பகுதிகளில் மேலும் ஆயிரக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் கிடைக்கும் என்று ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவா என்னும் சிறிய மாநிலம் தினமும் 40 டன் பிளாஸ்டிக் குப்பைகளை உற்பத்தி செய்கிறது. அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்ற குரல்கள் சமீபத்தில் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv