திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலில், 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன, 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில், 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை திருடப்பட்டது. 37 ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்ட அந்த சிலையை மீட்க, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில், தனிப்படை போலீசார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதில் திருடுபோன ஐம்பொன் நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், அச்சிலையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதன் விளைவாக ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்த நடராஜர் சிலை, டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது 30 கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலை, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது. வரும் 13ம் தேதி, அச்சிலையானது சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv