வெள்ளி, 20 செப்டம்பர், 2019

பெரியாரை அவமதித்து வீடியோ பதிவேற்றிய இளைஞர் தலைமறைவு:!

credit ns7.tv
Image
பெரியாரை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நம்பிப்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் அப்பகுதியில் பாஜக உறுப்பினராக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி சமூகசீர்திருத்தவாதி பெரியாரின் 141வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. முதல்வர், துணைமுதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிலையில், கலையரசன், பெரியார் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, மாட்டு சாணத்தில் மெழுகுவர்த்தி கொளுத்தி, அதை கேக் போல வெட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுருந்தார். அதோடு, பெரியாருக்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களிலும் மாட்டுசாணத்தை வீசியதாக கூறப்படுகிறது.
இந்த, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சமூக வலைதளவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேடியப்பன் என்பவர் கலையரசன் மீது காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து,  கலையரசன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(A)1(a)(விரோதத்தை ஊக்குவித்தல்), 505(1)(b)(பொதுமக்களுக்கு பயம் அல்லது எச்சரிக்கை விட காரணமாக இருத்தல்),505(1)(c)(வேறு எந்த வர்க்கம் அல்லது சமூகத்திற்கு எதிரான வன்முறையை தூண்ட காரணமாக இருத்தல்) உள்ளிட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, சமூக வலைதளங்களில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.
கலையரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவான கலையரசனை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ள தர்மபுரி காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.