சனி, 21 செப்டம்பர், 2019

வெறும் இலைகளை மட்டுமே பயன்படுத்தி செடிகளை உருவாக்கிவரும் வேளாண் விஞ்ஞானி...!

credit ns7tv
Image
விதைகள் இன்றி வெறும் இலைகளை மட்டுமே பயன்படுத்தி செடிகளையும், மரங்களையும் உருவாக்கி வருகிறார்  மேட்டுப்பாளையம் வேளாண் விஞ்ஞானி.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞானி ராஜரத்தினம். வெறும் இலைகளை மட்டுமே பயன்படுத்தி செடிகளையும், மரங்களையும் உருவாக்கி வருகிறார். விதைகளை பயன்படுத்தி வின்பதியம், மண்பதியம், கட்டிங், திசு வளர்ப்பு என நான்கு முறைகளில் ஒரு செடியையோ அல்லது மரத்தையோ மீண்டும் உருவாக்க முடியும். 
ஆனால் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு மரத்தில் உள்ள இலைகளையும், செடியில் உள்ள இலைகளையும் பயன்படுத்தி அதே மாதிரியான செடிகளை எந்தவித மரபணு மாற்றமும் செய்யப்படாமல் முற்றிலும் இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி இலையில் வேர்களை ஏற்படுத்தி அதன் மூலம் அதே வகையான செடிகளை உருவாக்கி வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக புதிய கண்டுபிடிப்புகளுக்கான நாற்றுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த ராஜரத்தினம் ,முதற்கட்டமாக பாரம்பரிய மரமான வேம்பு, நாவல் மற்றும் மலை வேம்பு போன்ற மர வகைகளும் கொய்யா, எலுமிச்சை, குண்டுமல்லி, இட்லி பூ, மற்றும் நோனி போன்ற விவசாயத்திற்கு பயன்படும் செடிகள் என எட்டு வகையான நாற்றுகளையும் ,மரங்களையும் உருவாக்கி வருகிறார்.  இந்த வளர்ப்பு முறை விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே நன்கு வளர்ந்த மரம் மற்றும் செடிகளிலிருந்து எடுக்கப்படும் இலைகள் இயற்கையான இளநீரில் நன்கு முக்கி எடுக்கப்படுகிறது. பின்னர், பாக்கெட்டில் அடைத்து வைத்துள்ள மண்ணில் இந்த இலைகள் குறிப்பிட்ட அழத்தில் பதியம் செய்யப்பட்டு தேவையான வெப்பம் மட்டுமே இதன் மீதுபடும் வண்ணம் குடில் அமைக்கபட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த நாற்றுகள் கோவை, சத்தியமங்கலம், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயிகளுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
மருத்துவ குணம் கொண்ட மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக தனது இரண்டு ஏக்கர் பரப்பளவில் நோனி போன்ற மரங்களை நட்டு மரமாக்கி பராமரித்து வருவதுடன் அதனை மதிப்பு கூட்டபட்ட பொருட்களாக மாற்றி வருகிறார். இந்த முயற்சியை கண்ட மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் தமிழக வோண்மைதுறை மூலம் நிதியுதவி அளித்து இந்த ஆராய்ச்சி பணிகளை மேலும் தொடரவும் புதிய மரம், செடிகளை கொண்டு வர ஊக்கப்படுத்தியுள்ளது, அத்துடன் தேசிய தோட்டக்கலைத்துறையும் இரண்டு வகையான கொய்யா நாற்றுகளை உற்பத்தி செய்து அதனை விவசாயிகளுக்கு அளிக்க ஒப்பந்தமும் செய்துள்ளது.
இடைவிடாது தொடர்ந்து 25 ஆண்டுகால முயற்சியால் சாதித்து காட்டியுள்ள ராஜரத்தினம் வேளாண்துறையில் ஒர் புதிய அடையாளமாக மாறியுள்ளார்.