credit ns7.tv
பருவநிலை மாற்றத்திற்கென தனி ஒரு ஆளாக போராடும் ஸ்வீடன் போராளி கிரேட்டா தன்பர்க். யார் இந்த கிரேட்டா? இவர் செய்த மாற்றங்கள் என்ன?
ஸ்வீடனை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்ற மாநாட்டின் கதாநாயகியாக மாறியுள்ளார். 16 வயதில் ஐ.நா மன்றத்தில் உரை, நோபல் பரிசுக்கு பரிந்துரை என கால நிலை மாற்றத்திற்கான தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் கிரேட்டா தன்பெர்க். ஸ்வீடனில் தனி ஆளாக தன் போராட்டத்தை தொடங்கிய கிரேட்டா, வெள்ளிக்கிழமை மட்டும் தன் வகுப்புகளை புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு போராடி வந்தார். அதனை தொடர்ந்து பருவநிலை மாற்றத்திற்கு உலக நாடுகளில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கால நிலை மாற்றத்திற்காக போராட Friday For Future என அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுத்தார்.
சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து சிறிது அளவு கூட மாசு ஏற்படுத்தாத சோலார் படகில் அமெரிக்கா வந்தவர், நியூயார்க் நகரில் மாணவர்களை ஒன்றிணைத்து காலநிலை மாற்றத்திற்கு என்ற பெரும் போராட்டத்தை நடத்தினார். ஐ.நாவின் பருவநிலை மாநாட்டில் பேசிய கிரேட்டா இங்கு நடக்கும் அனைத்தும் தவறாக உள்ளன. நான் இங்கு இருக்கக் கூடாது, கடல் கடந்து உள்ள என் பள்ளியில் நான் மீண்டும் படித்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை.
இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என கோபம் கலந்த கண்ணீருடன் ஆக்ரோஷமாக பேசினார். கடந்த தலைமுறை செய்த தவறுகளை இந்த தலைமுறையினர் அனுபவித்து வருகிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் பருவநிலை மாற்றம் குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அழகான வார்த்தைகளை பேசி வருகிறார்களே தவிர அவர்களின் நோக்கம் வேறாக உள்ளது என விமர்சித்தார்.
கிரேட்டாவின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானதால் அவருக்கான ஆதரவுக்குரல் அதிகரித்து வருகிறது. இந்திய கிரிக்கெட்டர் ரோஹித் ஷர்மா, நடிகை ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கிரேட்டாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கிரேட்டா ஆக்ரோஷமாக பேசும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்ரம்ப், பார்ப்பதற்கு நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறார் என கிண்டலாக பகிர்ந்துள்ளார். இதனை பலர் விமர்சித்து வருகின்றனர். ஐ.நா மன்றத்தில் ட்ரம்ப் வருகையின் போது கிரேட்டாவின் உடல்மொழி வீடியோவை பலர் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
மாறி வரும் காலநிலையில் இருந்து உயிரினங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என போராடும் கிரேட்டா தன்பெர்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மூன்று நார்வே எம்.பி.க்கள் முன்மொழிந்தனர். தற்போது கிரேட்டாவின் பெயர் நோபல் பரிசுக்கான பரிந்துரையில் உள்ளது. பருவநிலை குறித்து கிரேட்டா எழுதிய ஒரு கட்டுரை அவரை பருவநிலையை காப்பாற்றும் போராளியாக மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது.