திங்கள், 16 செப்டம்பர், 2019

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: ஆதரவு மற்றும் எதிர்ப்பு...!


5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது, மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், இந்த தேர்வினால் நன்மையே ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.  
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை சமீபத்தில் அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
அரசாணையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது போன்ற தேர்வுகள் மூலம் நெருக்கடி கொடுத்து மாணவர்களின் கல்வி கனவை அழித்துவிட வேண்டாம் என தமிழக அரசை திமுக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாணவர்களை குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரத்தை மத்திய மாநில அரசுகள் கூட்டாக கடைபிடிப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 
ஆனால், இந்த விவகாரத்தில் ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவால் மாணவர்களுக்கு நன்மை ஏற்படும் என கூறியுள்ள அவர், பொதுத் தேர்வு நடத்தப்பட்டால் தான் மாணவர்கள் நன்றாக படிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 
அதே நேரம் மு.க.ஸ்டாலின் கருத்தை வரவேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், திருமாவளவன், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  நடத்துவது, மாணவர்களை மேற்படிப்புக்கு செல்லவிடாமல் இடைநீக்கம் செய்யும் முயற்சி என கண்டித்துள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதை ஏற்க முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
credit ns7.tv