ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’!

credit ns7.tv
Image
மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பசுமை நூலகம் ஒன்றை கர்நாடக பல்கலைக்கழகம் ஒன்று அமைத்துள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு பிறகு வாசிப்பு பழக்கம் என்பது மக்களிடையே மிகவும் மங்கிவிட்டது. நாளிதழ், புத்தகங்களின் இடங்களை டிவி, மொபைல் போன்றவை ஆக்கிரமித்துவிட்டன.
இந்நிலையில் மங்கிவரும் வாசிப்பு பழக்கத்தை மாணவர் சமுதாயத்தினரிடம் மீண்டும் கொண்டுவரும் ஒரு முயற்சியாக பசுமையான சூழலில் நூலகத்தினை கர்நாடகாவில் உள்ள Kuvempu பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது.
அடர்த்தியான மரங்கள், குளம் என பசுமை போர்த்திய இயற்கை எழில்மிகு, அமைதியான பூங்காவை இதற்காக அமைத்துள்ளனர். இங்கு வைஃபை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதன் காரணமாக புத்தகங்களை மட்டுமல்லாமல் இணைய வாயிலாகவும் புத்தகங்களை படித்துக்கொள்ள முடிகிறது. எனவே நவநாகரீக மாணவர்களும் இந்த அமைதியான சூழலில் இணைய வழியில் புத்தகங்களை படித்துக் கொள்ளலாம். 
இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் வீர பந்தாரப்பா கூறுகையில், மூடப்பட்ட அறையில் இறுக்கமான சூழலில் புத்தகங்களை படிப்பதற்கு பதிலாக அமைதியான, காற்றோட்டமான இயற்கையான சூழலை மாணவர்களுக்கு உருவாக்கி கொடுத்துள்ளோம், இது எந்தவித இடையூறுமின்றி வாசிப்பு பழக்கத்தை மாணவர்களுக்கு அளிக்கும் என தெரிவித்தார்.
பசுமை நூலகம் தொடர்பாக மாணவர்கள் பேசும்போது, திறந்த வெளியில் புத்தகங்களை படிப்பது, சலிப்பை ஏற்படுத்தாமல் ரம்மியமாக உள்ளதாகவும். தேர்வு நேரங்களில் இரவு 7 மணி வரை இங்கு படிப்பதாகவும், பாதுகாவலர்கள் தக்க பாதுகாப்பை மாணவிகளுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தனர். மேலும் குழுவாக கலந்துரையாடுவதற்கு ஏற்ற இடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.