வியாழன், 26 செப்டம்பர், 2019

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்-டெல்லி அரசு அறிவிப்பு!

credit ns7.tv
Image
டெல்லியில், வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் கெஜ்ரிவால் அரசு, 2020ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சமீபத்தில் டெல்லி அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணங்கள் ஏதுமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “முக்யமந்திரி கிரெய்தார் பில்ஜி மீட்டர் யோஜனா” திட்டத்தின் கீழ் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் மானியம் பெறலாம் என்று தெரிவித்துள்ளார். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் முன்பணம் செலுத்தி மீட்டர்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த மீட்டரைப் பெறுவதற்கு வாடகை வீட்டில் இருப்பதற்கான ஒப்பந்தத்தின் நகலை ஒப்படைத்தால் போதுமானது என்று அறிவித்துள்ளார். இதற்கு முன்பு, வீட்டின் உரிமையாளரிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அதை நீக்கி, மானியம் பெறும் நடைமுறையை எளிமைபடுத்தியுள்ளனர்.
டெல்லியில் வசிக்கும் மக்கள், மாதத்திற்கு 200 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால், அதற்கு கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை என்று கடந்த ஆகஸ்டு 1ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த பலனை, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் பெறலாம் என்று திட்டத்தை விரிவுபடுத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாதம் 200 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. 200 யூனிட்டுகளுக்கு மேல் 1 யூனிட் அதிகம் பயன்படுத்தினாலும் மொத்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் 100 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் கடந்த 2016ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.