சனி, 21 செப்டம்பர், 2019

சர்ச்சையில் சிக்கியுள்ள இந்தியாவின் முதல் போர்க்கப்பல்!

Image
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதன் பின்னணியில் பயங்கரவாத சதி எதுவும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 
ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் முதல் போர்கப்பல் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த கப்பல் தான், கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஐஎன்எஸ் விக்ராந்தின் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை சோதித்து பார்த்த போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் காத்திருந்தன. ஒரு முக்கியமான கம்ப்யூட்டர், 10 ஹார்ட் டிஸ்குகள், 3 சிபியு ஆகியவை விக்ராந்த் கப்பலில் இருந்து மாயமானது அறிந்து அதிகாரிகள் திகைத்து போயினர். 
ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதிக்குள் இந்த பொருட்கள் மாயமாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த திருட்டு குறித்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது. அதாவது, திருடிய பொருட்களை, எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அதற்கு கொள்ளையர்களுக்கு போதிய அவகாசமும் கிடைத்திருக்கிறது.
இது தான் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக உருவாகி வரும் போர் கப்பலில் இருந்து கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்குகள், போன்றவை திருடப்பட்டிருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி தான் முன் நிற்கிறது. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் மட்டுமே. 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இவ்வளவு பாதுகாப்பான இடத்தில் இருந்து திருட எவரும் முயற்சிக்கமாட்டார்கள். இதனால் அதன் பின்னணியில், மிகப்பெரிய சதிதிட்டம் எதுவும் இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலைப் பற்றிய மிக முக்கிய செய்திகள் அனைத்தும் திருடப்பட்ட கருவிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் இதில் இருக்குமோ என்ற அடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விக்ராந்த் கப்பல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் இருப்பினும் உள்பகுதியில் தனியார் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்தே கணினி பாகங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் மீதும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் போர்கப்பலில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுனர்

credit ns7.tv