சனி, 14 செப்டம்பர், 2019

கட்டணத்தை காரணம் காட்டி 7-ம் வகுப்பு மாணவியை வெளியேற்றிய தனியார் பள்ளி...

credit ns7.tv
Image
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவி பள்ளியின் வாசலில் நின்று கதறி அழுத காட்சிகள் வெளியாகியுள்ளது. 
எக்காலத்திலும், பணமில்லாதவனுக்கு கல்வி எட்டாக்கனியாகி விடக்கூடாது என்பதை வலியுறுத்தியே இலவச கல்வியை அளித்து வருகிறது அரசு... ஆனால் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், எப்படியாவது குழந்தைகளை நுனிநாக்கில் ஆங்கிலம் பேச வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், கல்வி கட்டணத்தை பொருட்படுத்தாமல் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அதிகரித்து விட்டனர். இதனையே சாதகமாக கொண்டு கட்டணத்தை காரணம் காட்டி ஒரு பள்ளி ஒரு சிறுமியின் கல்வியை மறுப்பது எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை நகரில் ஹயக்ரீவா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது.  இந்த பள்ளியில் கடமலைக்குண்டு நகரைச் சேர்ந்த ஆனந்தன் - இலக்கியா தம்பதியரின் மகள் யுகிதா 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். யுகிதாவின் தந்தை இலக்கியாவை விவாகரத்து செய்ததால் கூலி வேலைக்கு சென்று அவர் மகளை படிக்க வைத்து வருகிறார். நடப்பாண்டு கல்விக்கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் 6 ஆயிரம் ரூபாயை மட்டுமே செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எஞ்சிய தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியும் ஏழ்மை காரணமாக யுகிதாவால் மீதப்பணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் இன்று நடைபெற்ற காலாண்டு தேர்வை எழுதவிடாமல் யுகிதாவை பள்ளியை விட்டு வெளியேற்றியது நிர்வாகம். தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த தாய் இலக்கியா மகளின் பரிதாப நிலையை கண்டு கண்கலங்கினார். 
தேர்வு எழுத முடியாத விரக்தியில் மாணவி யுகிதா கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த பள்ளியில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
கல்வி கண் திறப்பவனை கடவுளாக பாவிக்கும் சமுதாயத்தில், பணத்தை காரணம் காட்டி கல்வியை மறுப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி கட்டணங்களை முறைப்படுத்தப்பட்ட பின்னரும் கட்டண கொள்ளை நடைபெறுவதை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையும்.