புதன், 11 செப்டம்பர், 2019

உலகம் முழுவதும் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் - WHO அறிக்கை!

credit ns7.tv
Image
உலகம் முழுவதும், 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், பெண்களை விட மூன்று மடங்கு ஆண்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்கொலை தடுப்பு நாள் உலகம் முழுவதும் செப்டம்பர் 10ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை மற்றும் காரணங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அடுத்ததாக, 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை, போரால் இறப்பவர்களைக்காட்டிலும் அதிகமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள் விஷம், தூக்கிட்டுக் கொள்ளுதல் அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழக்கும் வழிமுறைகளையே பின்பற்றுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது. மன அழுத்தத்தை சமாளித்து தற்கொலை முயற்சிகளை கைவிடுவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது. தற்கொலை என்பது உலகளாவிய பிரச்சனை. எல்லாவயதினர், பாலினத்தினர், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் உயிரிழப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக தற்கொலை இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. பெண்களைப் பொறுத்தவரை 15வயது முதல் 19 வயது வரையிலான பெண்கள் தற்கொலை செய்து கொள்வது பிரசவகால இறப்புகளுக்கு அடுத்த நிலையில் உள்ளதாக கூறியுள்ளது. மேலும், சாலை விபத்துகளால் இறப்பது, வன்முறைகளால் இறப்பதற்கு அடுத்து பதினபருவத்தினர் உயிரிழப்பது தற்கொலைகளால்தான்  அந்த அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஆண்டுதோரும் 8 லட்சம்பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், இந்த எண்ணிக்கையானது மலேரியா, மார்பகப் புற்றுநோய், போர் மற்றும் கொலைகளால் இறப்பவர்களுடைய எண்ணிக்கையை விட அதிகம் என்று அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும், உலக அளவிலான புள்ளி விவரங்களின் படி கடந்த காலங்களை விட தற்கொலை செய்துகொள்வோ

ரின் எண்ணிக்கை 9.8% ஆக குறைந்துள்ளதாகவும், வளமான நாடுகளில் பெண்களை விட மூன்று மடங்கு ஆண்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றும், இந்த எண்ணிக்கை வளம் குறைந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்கொலைகள் தடுக்கக்கூடியது தான். நிரூபிக்கப்பட்ட தற்கொலை தடுப்பு உத்திகளை தேசிய சுகாதார மற்றும் கல்வித் திட்டங்களில் இணைக்க அனைத்து நாடுகளையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், தற்கொலைகளை குறைப்பதற்கு, தற்கொலை எண்ணத்தில் இருப்பவருக்கு பூச்சி மருந்து உள்ளிட்ட விஷ பொருட்களை கிடைக்கவிடாமல் செய்தாலே போதும். தற்கொலை செய்துகொள்வதற்கு அதிகம் பேர் பயன்படுத்தும் உக்தியாக இது இருக்கிறது. மற்றதை விட பூச்சி மருந்து உட்கொள்வது ஆபத்தானது; அதிக ரசாயனம் ரத்தத்தில் கலப்பதால் அதற்கு எதிர்மருந்து கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பூச்சி மருந்து உட்கொள்ளும் தற்கொலை முயற்சிகள் பெரும்பாலும் உயிரிழப்பில்தான் முடிகிறது. பூச்சி மருந்து விற்பனைகளை முறைப்படுத்தினாலே தற்கொலைகளை குறைக்க முடியும் என்று அது நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக கிராமப்புறத்தினர் தான் இதை அதிகம் உட்கொள்வதாகவும், அருகில் போதிய மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால், உரிய நேரத்தில் முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பதையும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில், பூச்சிக்கொல்லிகளை தடைசெய்ததன் மூலம் 1995 முதல் 2015 வரை 93,00 தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.