திங்கள், 30 செப்டம்பர், 2019

பதவி விலகிய நீதிபதி தஹில் ரமானி மீது முறைகேடு புகார்...!


Image
பதவி விலகிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது முறைகேடு புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து, மத்திய உளவுத்துறையின் அறிக்கை மீது, விசாரணை நடத்த சிபிஐக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, மேகாலய உயர்நீதிமன்றத்திற்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், பணியிட மாற்றத்தை ஏற்க மறுத்த அவர், தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். 
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை தஹில் ரமானி வாங்கியது தொடர்பான வங்கிப் பணப்பரிமாற்றம் மற்றும் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்ட சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற அமர்வை கலைத்த விவகாரங்கள், அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. 
இதுகுறித்து மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்துள்ள நிலையில், அறிக்கை மீது சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே தஹில் ரமானி ராஜினாமா விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வேளையில், தற்போது எழுந்துள்ள புதிய சர்ச்சைகளும் நீதித்துறை வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
credit ns7.tv