திங்கள், 16 செப்டம்பர், 2019

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

credit ns7.tv
Image
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசியதுடன் பாகிஸ்தானை புகழ்ந்தும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரான சரத் பவார் விவசாயத்துறை, பாதுகாப்புத்துறை, நுகர்வோர் மற்றும் உணவு வினியோகம் உள்ளிட்ட துறைகளின் மத்திய அமைச்சராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பதவிகளை வகித்துள்ளார். மகராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் ஆளும் பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு அணி மாறி வருகின்றனர்.
இந்நிலையில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட சரத்பவார் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததுடன், பாகிஸ்தானை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
“நான் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளேன், அவர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதையும் அனுபவித்துள்ளேன், பாகிஸ்தானில் பாகிஸ்தானியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், அவர்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை எனவும் இங்குள்ளவர்கள் பேசிவருகின்றனர், இது போன்ற பேச்சுகள் அங்குள்ள (பாகிஸ்தான்) உண்மைநிலையை அறிந்திராமல் அரசியல் நலன்களுக்காக பரப்பப்படுபவை.
தற்போது ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது, சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினர், சிறுபான்மையினருக்கு எதிராக சகிப்புத்தண்மையற்றவர்களாக உள்ளனர். இவர்கள் சமூகத்தில் சமநிலையை குறைக்க முயற்சிக்கின்றனர். குறிப்பிட்ட நம்பிக்கையை பின்பற்றாவிட்டால் இச்சமூகத்தில் வாழ முடியாது என்ற கொள்கையை பரப்ப முயல்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம்:
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதை இந்த அரசு பறைசாற்றியுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாத நடவடிக்கைகள் மேலும் வலுவடையவே செய்யும் என்று சரத் பவார் கூறியுள்ளார்.