செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ஜம்மு காஷ்மீர் விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...!

Image
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசும் காஷ்மீர் அரசும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 
இதனிடையே தனது உறவினர்களை சந்திக்க ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்ரீநகர், பரமுல்லா, அனந்தநாக் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு  குலாம் நபி ஆசாத் செல்ல அனுமதி அளித்தது. அதேவேளையில், ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது. 
இதே போன்று தேவைப்பட்டால் ஜம்மு காஷ்மீர் செல்ல போவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை அணுக முடியவில்லை என மனுதாரர் ஒருவர் குறிப்பிட்டதை அடுத்து, உயர்நீதிமன்றத்தை அணுகமுடியவில்லை என்பது மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.

credit ns7.tv