செவ்வாய், 17 செப்டம்பர், 2019

வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு.. பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...!

Image
வீட்டு காவலில் இருக்கும் பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்த கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பரூக் அப்துல்லா வீட்டு காவலில் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்ததாகவும், ஆனால் தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை எனவும் வாதாடினார்.
இதையடுத்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் துசார் மேத்தா, ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யும் அளவுக்கு, வைகோ பரூக் அப்துல்லாவின் குடும்பத்தினர் இல்லை என்றார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இவ்வழக்கில் மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாக உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். 

credit ns7.tv