வியாழன், 12 செப்டம்பர், 2019

மொட்டை மாடி தோட்டத்தில் 30 வகை காய்கனிகளை பயிர்செய்யும் பெண்மணி!

Image
வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் வைத்து, அதிலிருந்து தன் வீட்டிற்கு தேவையான 60% காய்கறிகளை, ரசாயனம் கலக்காமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி உற்பத்தி செய்துகொள்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.
ஆந்திர மாநிலம் பீமாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உஷாராஜு. கிராமப்புற சூழலில் வளர்ந்த இவருக்கு 17வது வயதில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் விசாகப்பட்டினத்திற்கு இடம்பெயர்ந்தார். கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில், கிராமத்தில் கிடைத்தது போல ஃப்ரெஷ்ஷான, ரசாயனங்கள் பயன்படுத்தாத காய்கறிகள் அங்கிருந்த சந்தைகளில் கிடைக்கவில்லை. இதனால், சந்தைகளுக்குப் போவதையே வெறுத்த உஷாவிற்கு, நாம் ஏன் வீட்டிலேயே தோட்டம் வைக்கக்கூடாது என்ற யோசனைத் தோன்ற, அதை தன் வீட்டு மொட்டை மாடியில் 200 சதுர அடியில் செயல்படுத்தினார். இதற்காக பெரிய அளவில் பணம் செலவளிக்க துணியாத அவர், மண் தொட்டிகளுக்கு பதிலாக, பயன்படுத்தப்படாத, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருள்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்தார். பழைய ஷூக்களிலும் மண் நிரப்பி அதில் செடிகளை நட ஆரம்பித்தார். முதலில், ரோஜா, செம்பருத்தி உள்ளிட்ட பலவிதமான பூச்செடிகளை மட்டும் நட்டு சோதனை செய்து பார்த்த அவர், அந்த சோதனையில் வெற்றிபெற்றதையடுத்து, 800 சதுர அடிக்கு மொட்டைமாடி காய்கறி தோட்டத்தை விரிவுபடுத்தினார். 
gardening
செடிகளை நடுவதற்காக, அருகிலிருந்த தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் டீலரிடம், பழைய கேன்களை மிகக்குறைந்த விலையில் வாங்கி, அதற்கு வண்ணம் பூசி பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார் உஷா. தற்போது மொட்டை மாடி தோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட காய்கறிகளை பயிர்செய்து, தன் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை தானே உற்பத்தி செய்துகொள்கிறார். மீதத்தை, தோட்டம் வளர்க்க உதவியாக இருக்கும், வீட்டு காவலர் அப்பண்ணாவிற்கு கொடுத்துவிடுகிறார்.
இது போன்று தோட்டம் உருவாக்குவதற்கு பெரிய அளவில் மெனக்கெட வேண்டியதில்லை, முதலில் சற்று சிரமமாக இருக்கும் பின்னர் நுணுக்கங்களை கற்றுக்கொண்டதும் பராமரிப்பது எளிதாக இருக்கும் என்று கூறுகிறார்.
செலவில்லாமல் எப்படி மாடித்தோட்டம் உருவாக்குவது?
மண்ணை தாங்கும் தன்மை கொண்ட எந்த பொருளாக இருந்தாலும், அதில் செடிகளை வளர்க்கலாம் என்கிறார். உஷாவின் தோட்டத்தில், பயன்படுத்தப்படாத ஷூக்கள், 20 லிட்டர் தண்ணீர்கேன்கள், தெர்மாகோல் பெட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் டப்-கள் என்று அத்தனையையும் பயன்படுத்துகிறார்.
shoe-garden
உரத்திற்கு என்ன செய்வது?
உரத்திற்காக எந்த ரசாயனத்தையும் உஷா பயன்படுத்துவதில்லை. மாறாக சமையல் செய்தபின் மிஞ்சும் பொருட்களையே உரமாக்கிக்கொள்கிறார். அது, 800 சதுர அடியில் இருக்கும் தோட்டத்திற்கு பத்தாது என்னும் நிலையில், அவர் வீட்டின் அருகில் இருக்கும் 5 பேர் வீட்டிலிருந்தும் சமையல் கழிவுகளை வாங்கிக்கொள்கிறார். ஒரு நாளைக்கு 1.5 கிலோ உரத்தை இதிலிருந்து உருவாக்கிக்கொள்வதாக கூறுகிறார். சமையல் கழிவுகள் மட்டுமல்லாமல், அதில் காய்ந்த இலைகளையும் சேர்த்து உரத்தை தயாரித்துக்கொள்வதாகவும், இந்த உரங்கள் தயாராவதற்கு இரண்டு மாதங்கள் வரை எடுத்துக்கொள்கிறது என்று கூறுகிறார் உஷா.
pesticide
முதலில், சந்தைகளில் கிடைக்கும் இயற்கை உரங்களை பயன்படுத்திய அவர், பின்னர் மண்புழு உரம்தயாரிப்பது குறித்து தெரிந்து கொண்டு அதையும் தனது வீட்டு மாடியிலேயே செய்துகொள்கிறார். இதன் மூலம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் நன்றாக விளைச்சலைக்கொடுப்பதாக சொல்கிறார். ஒருகட்டத்தில் இதை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள உஷாவை பலர் அனுக ஆரம்பித்திருக்கின்றனர்.
பூச்சிகளை சமாளிப்பது எப்படி?
பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைக் கொண்டு பூச்சி எதிர்ப்பு மருந்துகளை தயாரித்து சமாளித்ததாகவும், அவ்வபோது, பூச்சிக்கொல்லியாக மாட்டின் சிறுநீரை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில், இது போன்று பயன்படுத்தி வந்த அவர், சில நாட்களில் குருவிகள் உஷாவின் தோட்டத்திற்கு வந்து செல்ல ஆரம்பிக்க, பூச்சிகளை கொல்லும் வேலைகளை அவைகளே பார்த்துக்கொள்வதாக சொல்கிறார். 
இத்தனை வேலைகளையும் செய்யும் உஷா குடும்பப்பெண்மணியும் இல்லை. ஒரு நிறுவனத்தில் டயட் ஆலோசகரானக freelancer ஆக பணிபுரிகிறார். காலையில் ஒருமணி நேரம், சில நேரங்களில் மாலையில் பராமரிப்பு வேலைகளுக்காக தனது நேரத்தை செலவிடுகிறாராம். உஷாவால் இயலாத நேரங்களில், வாட்ச்மேன் அப்பண்ணாவும், உஷாவின் அம்மாவும் பார்த்துக்கொள்வதாக கூறுகிறார்.
kothamalli
செடிகளை வளர்ப்பதால் மனது ஆரோக்கியமாக இருப்பதாகவும், பசுமையான இடத்தில் ஓய்வு நேரத்தில் செல்விடுவதால் மன அமைதி கிடைப்பதாகவும் குறிப்பாக சுவையான, ரசாயன கலப்பில்லாத காய்கறிகள் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார். தன் தோட்டத்தில் கிடைத்த காய்கறிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி கூடுதல் மனநிறைவை தருவதாக கூறுகிறார் உஷா.

காய்கறி தோட்டம் வைக்க நினைப்பவர்களுக்கு உஷாவின் அறிவுரை:
உங்களுக்கு, நீங்கள் உண்ணும் உணவை ஃப்ரெஷ்ஷாகவும், ரசாயனம் இல்லாததாகவும், அதிக சத்து கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால் உங்களால் இதை செய்ய முடியும். செடிகளை வளர்க்க இடம் இல்லை என்பதை மட்டும் காரணமாக ஒருபோதும் கூறாதீர்கள்; சிறிய கேனில்  மண்ணை நிரப்பி அதில் கேரட், முள்ளங்கி, உருளைக்கிளங்கு போன்ற மண்ணுக்கு அடியில் வளரும் தாவரங்களை வளர்க்க முடியும். வீட்டில் வீணான பாத்திரங்கள் இருக்கிறதா? ஒன்றோ இரண்டோ, அதை வைத்து இன்றே வீட்டில் செடிகளை வளர்க்க ஆரம்பியுங்கள். போகப்போக பெரிய தோட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். செடிகளை வளர்ப்பதில் சில தவறுகளை செய்யலாம். ஆனால் அதிலிருந்து கற்றுக்கொண்டு நேர்த்தியாக செய்யலாம் என்று கூறுகிறார் உஷா.
galiflower
முதலில், பெரிய மாடித்தோட்டத்தை உருவாக்கி வளர்த்தபோது, அவைகள் காய்க்கும் தருவாயில், 2014ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவான ஹுதுத் புயலால் அத்தனை செடிகளும் நாசமாகிவிட்டதாகவும், மனம்தளராமல் சில மாதங்களிலேயே புதிய தோட்டத்தை உருவாக்கிவிட்டதாகவும் நினைவுகூறும் உஷா, உரிய பலன் கிடைக்காவிட்டாலும் தொடந்து முயற்சி செய்ய வேண்டும் என்கிறார். செய்ய வேண்டும் என்று செய்யாமல் ஒரு பொழுதுபோக்காக கூட முயற்சித்துப் பார்க்கலாம் என்று அறிவுரை கூறுகிறார்.
fresh-veggis
இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள   Rythu Mitra என்ற Facebook குழுவில் சேர்ந்து பயன்பெறலாம்.
Photo Courtesy : The Better India