புதன், 11 செப்டம்பர், 2019

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...!

credit ns7.tv
Image
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். 
ஜெனிவாவில் நடைபெறும், 42-வது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, காஷ்மீரில் அரசியல் தலைவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், காஷ்மீர் மக்களின் பாதிப்பை, ஐ.நா. கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜம்மு- காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை, முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆவேசமாக பேசினார். 
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குரேஷி, இந்திய மாநிலமான ஜம்மு - காஷ்மீரில், சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, இந்தியா அனுமதிக்க வேண்டும் என்றார். பாகிஸ்தான் தரப்பில், காஷ்மீரை "பிரச்னைக்குரிய பகுதி" என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்த நிலையில், முதல்முறையாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவின் மாநிலம் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்தியாவின் பிரதிநிதி சையத் அக்பருதீன், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், என்பதை சுட்டிக்காட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது