சனி, 28 செப்டம்பர், 2019

அணு ஆயுத போர் வெடித்தால், அதற்கு ஐ.நா. சபையே பொறுப்பு

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத போர் வெடித்தால், அதற்கு ஐ.நா. சபையே பொறுப்பு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார்.  இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவர், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் நல்லுறவை பேண முயற்சிகள் மேற்கொண்டதாகக் கூறினார். ஆனால், இந்தியா அதனை புறந்தள்ளிவிட்டதாக விமர்சித்தார். 
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், அங்கு 80 லட்சம் மக்களை இந்தியா சிறை வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் உற்று நோக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் , தான் அங்கு இருந்திருந்தால், கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தியிருப்பேன் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
ஐந்தாயிரம் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பியதாக இந்தியா கூறுவதாக குறிப்பிட்ட இம்ரான்கான், இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி இந்தியா தங்கள் மீது தேவையின்றி பழிபோடுவதாக குற்றம்சாட்டினார். காஷ்மீரில் இருக்கும் தடைகள் விலக்கப்பட்ட பின்னர் அங்கு ரத்த ஆறுதான் ஓடும் என்றும் அவர் கூறினார். 
credit ns7.tv