வெள்ளி, 13 செப்டம்பர், 2019

சுபஸ்ரீ உயிரிழப்பு வழக்கில் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி.!

credit ns7.tv
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.  பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறிய நீதிபதிகள், விதிமீறல் பேனர்கள் வைப்பதைத் தடுக்க இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பேனரால் உயிர்பறிபோன சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமும், மெத்தனப்போக்கும்தான் காரணம் என்று நீதிபதிகள் கூறினர். 
சுபஸ்ரீ உயிரிழப்பு காரணமான, காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதனை தலைமைச்செயலாளர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டனர். அப்போது ஆஜரான டிராபிக் ராமசாமி தரப்பு, அரசியல் கட்சி அறிக்கையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பேனர் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது. இதனை பேனரே வைக்கக்கூடாது என்று மாற்றும்படி உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தரப்பில் வாதிடப்பட்டது. 
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதியளிக்கும் வகையில், மனுவாக தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டனர். 
சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு இடைக்கால இழப்பீடாக ஐந்து லட்சம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து வழக்கானது செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.