புதன், 23 அக்டோபர், 2019

2019 கனடா தேர்தல்: மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஜஸ்டின் ட்ரூடோ!


Image
கனடா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க இருக்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
கனடா நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலம் நிறைவுபெறுவதையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் ஆண்ட்ரூ ஷீர் போட்டியிட்டார்.
மொத்தம் உள்ள 304 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகள் நிலவரத்தில் 154 தொகுதிகளில் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பெற சிறிய கட்சிகளின் உதவியை ஜஸ்டின் நாட வேண்டி உள்ளது.
இதனிடையே தங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வெற்றி தேடி தந்ததற்காக கனடா மக்களுக்கு தனது நன்றியை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.
இந்தியா போன்று 5 ஆண்டுகளுக்கு அல்லாமல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கனடாவில் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2015ல் நடைபெற்ற தேர்தலில் 184 இடங்களில் லிபரல் கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv