சனி, 12 அக்டோபர், 2019

சவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரானிய எண்ணெய் கப்பல் மீது ராக்கெட் தாக்குதல்?

credit ns7.tv
Image
சவுதி அரேபியாவின் கடல் பகுதியான செங்கடலில் ஈரானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது இரண்டு ராக்கெட்கள் ஏவப்பட்ட தாக்குதலில் அக்கப்பல் தீ பிடித்து எரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
ஈரானின் National Iranian Tanker Co என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்தக் கப்பல் மீதான தாக்குதலை தொடர்ந்து அதிலிருந்த கச்சா எண்ணெய் செங்கடலில் கலந்து வருகிறது. ஜெத்தா நகரில் இருந்து சுமார் 96கிமீ தொலைவில் இந்த கப்பல் இருந்துள்ளது. 
வளைகுடா பகுதி நாடுகளில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில் இந்த தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மாறியுள்ளது.
கப்பல் மீதான தாக்குதல் குறித்து சவுதி அரேபிய அரசு பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும், இந்த தாக்குதல் மூலம் ஈரான், சவுதி இடையிலான பதற்றம் அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதாக சர்வதேச சமூகம் கருதுகிறது.
கடந்த மே, ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையிலும் சவுதி அரேபியாவின் எண்ணெய் வளங்களின் மீது நடைபெற்ற தாக்குதல்களின் தொடர்ச்சியாக இது இருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பலின் பெயர் Sabiti என்றும் இதன் இருப்பிடத்தை அறியும் சாதனங்கள் கடந்த 2 மாதமாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கியுள்ளது. 
தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 2% அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.