புதன், 23 அக்டோபர், 2019

ஜப்பானின் புதிய பேரரசராக அரியணை ஏறினார் நருஹிட்டோ...!


Image
ஜப்பானின் புதிய பேரரசராக  நருஹிட்டோ  அரியணை ஏறிய விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 
ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹிட்டோ பதவி விலகியதை அடுத்து கடந்த மே 1ஆம் தேதி புதிய பேரரசராக அறிவிக்கப்பட்டார்  நருஹிட்டோ. ஏற்கனவே, அவரது மனைவி மசாகோ மே 1 அன்று நடந்த சிறிய விழாவில் பேரரசி ஆனார். ஆனால் பேரரசர் அதிகாரப்பூர்வமாக அரியணை ஏறும் நிகழ்வை ஜப்பானிலேயே மிகப்பெரிய விழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனைக் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு  இன்று ஒரு நாள் மட்டும் ஜப்பானுக்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜப்பானிய நேரப்படி  பிற்பகல் ஒரு மணிக்கு இம்பீரியல் அரண்மனையில் நிகழ்ச்சி தொடங்கியது. 
சுமார் 8 டன் எடையும், ஆறரை மீட்டர் உயரமும் கொண்ட  "Takamikura" என்றழைக்கப்படும் ஜப்பானியப் பேரரசரின் அரியணையில் பேரரசராக அமர்ந்து அதிகாரப்பூர்வமாக  பதவியேற்றுக்கொண்டார் நருஹிட்டோ. புதிய பேரரசரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  பிரிட்டன் இளவரசர் சார்லஸ், மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, சீன துணைத் தலைவர் வாங் கிஷன் மற்றும் அமெரிக்க தூதர்கள் என  உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 2,000 சிறப்பு அழைப்பாளர்கள் விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்தினர். 
புதிய பேரரசரின் பதவியேற்பு நிகழ்ச்சியை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட ஜப்பான் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே, நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  மேலும் பேரரசரின் பதவியேற்பையொட்டி சிறையில் வாடும் சுமார் 55,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவும் ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. 
டோக்கியோவில் கடுமையான மழை பெய்துகொண்டிருந்த போதிலும், பேரரசர் நருஹிட்டோவின் அரியணை ஏறும் நிகழ்வை கொண்டாடுவதற்காகவே ஜப்பானிய மக்கள் இம்பீரியல் அரண்மனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். 
ஜப்பானில் பேரரசருக்கு அரசியல் அதிகாரங்கள் கிடையாது, ஆனால் வெளிநாட்டு உயர் பிரமுகர்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு அதிகாரப்பூர்வ கடமைகள் அரசருக்கு இருக்கிறது. ஷின்டோ மதத்துடன் பிணைந்துள்ள ஜப்பான் முடியாட்சியில், அரசரே இன்னும் சமய விழாக்களை நடத்துகிறார்.
credit ns7.tv