வியாழன், 17 அக்டோபர், 2019

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு!

சுதந்திரப் போராட்டத் தலைவரும், இந்து மகா சபாவின் தலைவராக இருந்தவருமான வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று மகாராஷ்ட்ர பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாததற்கு காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியே காரணம் என்று பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்நிலையில், மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்பு படுத்தப்பட்ட வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்குப் பதில், காந்தியை கொன்ற நாதூராம் கோட்சேவுக்கே பாரத ரத்னா வழங்கலாம் என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
காந்தியின் 150ம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடும் இந்த தருணத்தில் அரசு அவ்வாறு அறிவிக்குமானால், அது பொருத்தமாக இருக்கும் என்றும் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார். 
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் மற்றும் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற இரு முகங்கள் வீர சாவர்க்கருக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv