புதன், 16 அக்டோபர், 2019

ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை...!

Image
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப. சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. 
அவரை கைது செய்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை முயன்று வரும் நிலையில், ப. சிதம்பரம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. மேலும், சிதம்பரத்ததை கைது செய்வதாக இருந்தால், கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அவரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. 
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று பேர், இன்று காலை திகார் சிறைக்கு சென்று ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அமலாக்கத்துறையால் ப. சிதம்பரம் கைது செய்யப்படக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரத்தைக் காண, அவரது மனைவி நளினியும், மகன் கார்த்தியும் திகார் சிறைக்கு சென்றுள்ளனர். 
credit ns7.tv