வியாழன், 24 அக்டோபர், 2019

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை: அதிரடி அறிவிப்பு!


Image
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு வேலைகள் தரப்படமாட்டாது என்று அஸ்ஸாம் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதிய நிலக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கொள்கையின் படி, நிலமற்ற பழங்குடியின விவசாயிகளுக்கு மூன்று பீகா நிலங்கள் வழங்குவது எனவும், நிலமற்ற மக்களுக்கு வீடுகட்டிக்கொள்வதற்கென பாதி பீகா நிலம் வழங்குவது என்றும் அந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்க முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகா நிலம் என்பது சரியான வரையறை ஏதும் இல்லாத அளவீடாகும். இந்த நிலத்தின் அளவீடானது இடத்திற்கு இடம் மாறுபடும். பொதுவாக, இந்த முறையானது நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், அஸ்ஸாம், பீகார்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த அளவீடு தென்னிந்திய மாநிலங்களில் பயன்படுத்தப்படுவது இல்லை.
அஸ்ஸாம் அமைச்சரவைக்கூட்டத்தில், இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வோருக்கு அரசு வேலைகள் தரப்படமாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது ஜனவரி 1 2021 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, பேருந்து கட்டணத்தையும் 25% அளவிற்கு உயர்த்துவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 2017ல் அஸ்ஸாம் மாநில அரசு “அஸ்ஸாம், மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகார கொள்கை” என்ற ஒன்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. அதன்படி, யாருக்கெல்லாம் இரண்டு குழந்தைகள் மட்டும் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே அஸ்ஸாமின் அரசு வேலைகளைப் பெற தகுதியுள்ளவர்கள். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் என்றும், தற்போது இருக்கும் அரசு பணியாளர்களும் இரண்டு குழந்தைகள் கொள்கையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அந்த கொள்கையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv