ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பாறை உருண்டு விழுந்ததாலும், மரங்கள் சாய்ந்து விழுந்ததாலும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை நீடித்து வருவதால் நேற்று ஒரே நாளில் ஏழு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்னர் பொக்லைன் உதவியுடன் சாலை சீரமைக்கப்பட்டது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதில் 67 இடங்களில் மிகவும் அபாயகரமானது என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலைரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால், கடந்த 18 முதல் 20ம் தேதி வரை மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது
credit ns7.tv