பஞ்சமி நிலம் என்றால் என்ன என்ற கேள்வி இங்கு பிரதான பேசு பொருளாகியுள்ளது. ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைபட்டுக்கிடக்கும் வரை, இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பு அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. குறிப்பாக, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளமான நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில், கொத்தடிமைகளாக வேலை செய்தவர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர்.
இந்த பஞ்சமர்களின் வாழ்க்கை மேம்படவும், சம உரிமைக்கிடைக்கவும், நிலம் அவர்களின் கைகளில் சேர வேண்டும் என்ற உரையாடல், 1890களில் ஏற்பட்டது. குறிப்பாக, விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டு, மனிதாபிமானமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பஞ்சம மக்கள் வாழ்கின்றனர் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே.ஹெச்.ஏ.திரமென்ஹீர் ஹெரே 1891-ல் பிரிட்டிஷ் அரசுக்கு 17 பகுதிகள் கொண்ட அறிக்கையை சமர்பித்தார்.
ஜே.ஹெச்.ஏ.திரமென்ஹீர் ஹெரேவிற்கு முன்பாகவே, , திராவிட மகாஜன சபை நிறுவனரும், ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை ஆசிரியருமான அயோத்திதாச பண்டிதர், கிறிஸ்துவ மிஷனரி Free of Scotland சபையை சார்ந்த ஆடம் ஆண்ட்ரு மற்றும் வெஸ்லியன் சபையை சார்ந்த வில்லியம் கௌடி போன்றோரும் ஒடுக்கப்பட்ட பஞ்சமர்கள் குறித்து பல அறிக்கைகள், மாநாடுகள் வாயிலாக பஞ்சமி நிலம் குறித்து ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நீண்ட கோரிக்கைகளும் உரையாடல்களுமே பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு நிலங்களை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தது. இதன் எதிரொலியாக, 1891 ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்ற விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
இந்திய விவகாரங்களுக்காக இங்கிலாந்தில் துணைச் செயலாளராகப் பொறுப்பில் இருந்த ஜார்ஜ் நத்தானியேல் கர்சன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வெளியுறவுத் துறைச் செயலரும் மதறாஸ் மாகாண அரசும் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள் என்ற அறிக்கையின் தொடர் நடவடிக்கையாகத் தான் பட்டியல் இன மக்களுக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. அதன்படி, பட்டியல் இன மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, முதல் பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது என்பது விதி.
credit ns7.tv