திங்கள், 21 அக்டோபர், 2019

தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Image
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் புவியரசன், குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவித்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் குறிப்பிட்ட அவர், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார். அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பிருப்பதால் அந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv