திங்கள், 21 அக்டோபர், 2019

கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!


மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழைபெய்து வருகிறது. இதனையடுத்து கேரளாவின் திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், எர்ணாக்குளம் மற்றும் பாலக்காடு ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த 7 மாவட்டங்களிலும் கடந்த இருநாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இந்த நிலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது. இந்த மாவட்டங்களில் 115மிமீ முதல் 204 மிமீ வரை மழைப் பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நிலச்சரிவு, மற்றும் விரிசல் விடும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்த 7 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவைகள் மட்டுமல்லாது, கேரளாவின் வடக்கு மாவட்டங்களான கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் விடப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, மின்னல் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வைத்துக்கொள்ள வேண்டிய அவசரநிலை பாதுகாப்பு பெட்டகம் குறித்து பட்டியல் ஒன்றை அளித்துள்ளது. அதோடு, தேவைப்பட்டால் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவை மட்டுமல்லாது சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பதிலாக, நிவாரண முகாம்கள் குறித்த விவரங்களை பகிருமாறு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டும், இது போன்று ரெட் அலர்ட் விடப்பட்டதோடு, பெருமழை காரணமாக இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டன. அதே போலவே இந்த ஆண்டும் ஏற்கனவே வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களை பெருமழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
credit ns7.tv