திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் வசித்து வந்த, சுஜித் வில்சன் எனும் 2 வயது குழந்தை கடந்த அக்டோபர் 25ம் தேதி வெள்ளியன்று தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானான். பின்னர் குழந்தையின் பெற்றோர் தேடியபோது, சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றினுள் விழுந்தது தெரியவந்தது.
முதலில் பத்து அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித், பின்னர் மண்ணில் இருந்த ஈரப்பதம் காரணமாக 30 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்து ஆழ்துளை கிணற்றில் விழுபவர்களை மீட்கும் மணிகண்டன் என்பவர் வரவழைக்கப்பட்டார். அவரது கருவியை பயன்படுத்தியும் சிறுவனை மீட்க முடியாத நிலையில்,
சுஜித்தின் இரு கைகளிலும் கயிற்றைக் கட்டி வெளியே இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கையில் கயிற்றை வெற்றிகரமாக கட்டிவிட்ட நிலையில் மறு கையில் கயிற்றை கட்ட முடியாததால், சிறுவனை மீட்கமுடியாமல் மீட்புக் குழுவினர் தவித்து வந்தனர்.
சுஜித்தின் இரு கைகளிலும் கயிற்றைக் கட்டி வெளியே இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கையில் கயிற்றை வெற்றிகரமாக கட்டிவிட்ட நிலையில் மறு கையில் கயிற்றை கட்ட முடியாததால், சிறுவனை மீட்கமுடியாமல் மீட்புக் குழுவினர் தவித்து வந்தனர்.
இதற்கிடையில், ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் குழிதோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஜேசிபி இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கிவந்தன. இயந்திரங்கள் குழி தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக, ஈரமாக இருந்த மண் உள்வாங்கியதில் சிறுவன் சுஜித் 88 அடிக்கும் கீழே சென்றுவிட்டான். மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு தங்கினர்.
ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு தங்கினர்.
விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஆள்துளை கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழிதோண்டி அதன் வழியாக சிறுவனை மீட்கலாம் என்ற எண்ணத்தில், நெய்வேலி சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபடும் ரிக் இயந்திரம் அக்டோபர் 26ம் தேதி கொண்டுவரப்பட்டது.
ரிக் இயந்திரம் தோண்ட ஆரம்பித்ததும், சிறிது தூரத்தில் மண்ணின் இடையில் பாறைகள் இருந்ததால், ரிக் இயந்திரத்தால் அவற்றை உடைக்க முடியவில்லை. அதன் காரணமாக ராமநாதபுரத்தில் இருந்து மூன்று மடங்கு அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் அக்டோபர் 27ம் தேதி நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே அக்டோபர் 26ம் தேதி மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குழந்தை சுஜித்தை மீட்கும் பணிக்காக நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தடைந்தனர்.
மீட்பு பணிகளை துவங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்னும் அரை மணிநேரத்தில் குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர். ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டுவதற்கு பாறைகள் தடையாக இருந்ததால், ரிக் இயந்திரம் அகற்றப்பட்டு போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டு பின்னர் ரிக் இயந்திரம் மூலம் 98 அடிக்கு குழிதோண்டி சிறுவனை மீட்கலாம் என்று திட்டமிடப்பட்டது. அதனையடுத்து, போர்வெல் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டது. இந்நிலையில், மீட்புப்பணிகளை பார்வையிடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ரிக் இயந்திரத்தில் இருந்த பற்கள் உடைந்ததால், மாற்று வழியை தேடும் முயற்சியில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். அதோடு, எதிர்பார்த்ததை விட பாறைகள் கடுமையாக இருப்பதாகவும், இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததில்லை என்று ஆப்பரேட்டர் கூறுகிறார். இரண்டு இயந்திரத்தை பயன்படுத்தியும் 40 அடியைக் கூட தாண்ட முடியவில்லை என்று மேலும் தெரிவித்தார். இதனையடுத்து, மீட்பு பணிகள் குறித்து பேட்டியளித்த பேரிடர் மீட்பு ஆணையர் ராதாகிருஷ்ணன் “பல தரப்பிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுக்கப்பட்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் ஆலோசனை வழங்கலாம்; செலவுகளை அரசே ஏற்கும்!” என்று அறிவித்தார்.
சுஜித்தை மீட்கும் பணிகள் மூன்று நாட்களை கடந்துவிட்ட நிலையில், 28ம் தேதி பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், குழந்தை சுஜித்தின் மீட்புப்பணி முடிய குறைந்த பட்சம் 12 மணியாவது ஆகும். ஆனாலும் முயற்சியை கைவிட மாட்டோம், சவாலாக இருந்தாலும் மீட்புப்பணி தொடரும் என்று நேற்று அக்டோபர் 28ம் தேதி தெரிவித்தார். மேலும், "பலூன் முறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு குழந்தை சுஜித் சிக்கியுள்ளான்; நான்கரை இன்ச் போர் குழியில் பலூனை செலுத்த கூட இடமில்லை!" என்று தெரிவித்தார்.
பின்னர் 28ம் தேதி 72 மணிநேரத்தை கடந்த நிலையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றின் அருகே, 98 அடிக்கு குழிதோண்டிய பின் மற்றொரு வீரர் குழிக்குள் இறங்கி பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை மீட்க முடிவு செய்யப்பட்டது. முதலில் 55 அடிக்கு ரிக் இயந்திரம் மூலம் குழிதோண்டபட்ட பின்னர், பாறைகளை உடைக்கும் நடவடிக்கைகளில் மீட்புக்குழுவினர் இறங்கினர். 55 அடி குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர் அஜித் குமார் மண் மற்றும் பாறைகளின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றார். பின்னர் ரிக் இயந்திரம் அகற்றப்பட்டு போர் வெல் இயந்திரம் மூலம் பாறைகளை உடைக்க திட்டமிட்டு பாறைகள் உடைக்கப்பட்டது. மீட்புப் பணிகள் ஏற்கனவே 75 மணிநேரத்தை கடந்துவிட்டநிலையில், ரிக் இயந்திரம் மீண்டும் தனது பணியை தொடங்கியது.
மீதமிருக்கும் அடிகளுக்கு குழிதோண்ட மேலும் 12 மணிநேரம் ஆகும் எனவும், பக்கவாட்டில் குழிதோண்ட 7 மணி நேரம் ஆகும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததையடுத்து அனைவரும் நம்பிக்கை இழந்தனர். இந்நிலையில், திடீரென்று ரிக் இயந்திரங்கள் தங்கள் பணியை நிறுத்தினர். இதனால் குழம்பிய செய்தியாளர்கள், மீட்புக்குழுவினரிடம் விசாரித்த போது சிறுவன் விழுந்த ஆள்துளை கிணற்றின் வழியாகவே சிறுவனை மீட்கும் முயற்சியில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதன் பின்னர் 29ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், 28ம் தேதி இரவு 10 மணிமுதல் குழந்தை சுஜித் விழுந்த குழியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும், உடல் சிதைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து குழந்தை சுஜித் உயிரிழந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டது. 88 அடி ஆழத்தில் இருக்கும் சிறுவனின் உடலை முழுமையாக மீட்கும்
பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு 29ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் குழந்தை சுஜித்தின் உடல் சிதைந்த சிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுஜித்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறாய்விற்குப் பிறகு சிறுவனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுஜித் மீட்கப்பட்டதற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மீட்புப்பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்று காலை 8 மணிக்குள் மூடப்படும் என்று தெரிவித்தார்.
குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நாள் முதல் இறுதி நாள் வரை அனைத்து தரப்பு மக்களும் சுஜித் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று மனதார வேண்டினர். எனினும், அனைவரது வேண்டுதல்களும், மீட்புக்குழுவினரின் 80 மணிநேர போராட்டமும் பலனின்றி தோல்வியில் முடிந்தது. குழந்தை சுஜித் உயிரிழந்ததையடுத்து #RIPSujith, #SorrySujith மற்றும் #SujithWilson ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv