வெள்ளி, 25 அக்டோபர், 2019

யார் இந்த துஷ்யந்த் சவுதாலா?

Image
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திராத நிலையில் அங்கு தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணிசமான தொகுதிகளை வென்றுள்ள ஜனநாயக ஜனதா கட்சி மீது ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் கவனமும் திசை திரும்பியிருக்கிறது. இந்தக் கட்சி யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களே ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
90 தொகுதிகளை உள்ளடக்கிய ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. 21ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜகவிற்கு சாதகமாக இருந்த நிலையில் அங்கு பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை பெற முடியாமல் முக்கிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் தவித்து வருகின்றன. ஹரியானா தேர்தலில் மூன்று கட்சிகளே முக்கியத்துவம் பெற்று வலம் வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி 38 தொகுதிகளில் பாஜகவும், 34 தொகுதிகளில் காங்கிரஸும் முன்னிலை வகிக்கின்றன. போட்டி மிகவும் பலமாக இருந்தாலும் ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
ஜனநாயக ஜனதா கட்சியின் (JJP) தலைவராக இருப்பவர் துஷ்யந்த் சவுதாலா. இதற்கும் கடந்த ஆண்டின் இறுதியில் தான் இக்கட்சியே தொடங்கப்பட்டிருக்கிறது. 
துஷ்யந்த சவுதாலா, இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப் பேரனாவார், அதே போல இவரின் துஷ்யந்தின் தந்தை ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்திருக்கிறார். துஷ்யந்தின் தந்தை அஜய் சவுதாலவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரின் குடும்பமே இரு அரசியல் குடும்பமாகும்.
சவுதாலா குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிணக்கு காரணமாக குடும்பக் கட்சியான இந்திய தேசிய லோக் தளத்திலிருந்து தனியாக பிரிந்து சென்ற துஷ்யந்த், கடந்த ஆண்டு டிசம்பரில் தான் ஜனநாயக ஜனதா கட்சியை தொடங்கியிருக்கிறார். தேவி லாலால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய லோக் தளத்தின் (INLD) தலைவராக இருப்பவர் துஷ்யந்த சவுதாலாவின் தாத்தாவான ஓம் பிரகாஷ் சவுதாலா. 
ஓம் பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது, நடைபெற்ற ஆசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார். இதே வழக்கில் இவரின் மூத்த மகன் அஜய் சவுதாலாவும் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
ஓம் பிரகாஷ் சவுதாலா சிறைக்கு சென்ற போது இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு பொறுப்புத் தலைவராக அவரின் இளைய மகன் அபய் சவுதாலா தேர்வானார். சித்தப்பா அபயுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவே கட்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார் துஷ்யந்த்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர் துஷ்யந்த்.
தற்போது ஹரியானாவில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்திற்கு வந்துள்ளார் துஷ்யந்த் சவுதாலா..
2014 நாடாளுமன்ற தேர்தலில் ஹரியானாவின் ஹிசார் தொகுதியில் வெற்றி பெற்று இந்தியாவின் மிக இளம் வயது எம்.பி என்ற பெருமையை பெற்ற துஷ்யந்திற்கு தற்போது வயது 31.

credit ns7.tv