திங்கள், 14 அக்டோபர், 2019

நாட்டின் முதல் தனியார் ரயில் போக்குவரத்து மீது எழுந்துள்ள கட்டண சர்ச்சை!

Image
நாட்டின் முதல் தனியார் ரயில் போக்குவரத்தில், கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோ இடையே தனியார் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலான இந்த ரயிலை, இந்தியன் ரயில்வேயின் ஒரு அங்கமாக உள்ள IRCTC இயக்கி வருகிறது. இந்நிலையில், தேஜஸ் எக்ஸ்பிரசில், அதே பாதையில் பயணிக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தைவிட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். 
டெல்லி - லக்னோ இடையேயான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் AC Executive வகுப்புக்கான கட்டணம் 1,855 ரூபாயாகவும், AC Chair Car-க்கான கட்டணம் 1,165 ரூபாயாகவும் உள்ள நிலையில், தேஜஸ் ரயிலில், இவை முறையே  2,450 ரூபாயகவும் மற்றும் 1, 565 ரூபாயாகவும் உள்ளது. தனியார் ரயில் கட்டணங்களை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசுக்கே உள்ள நிலையில், விதிகளை மீறி IRCTC கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக ரயில்வே உயர் அதிகாரிகளும் குற்றம் சாட்டியுள்ளனர். 
நாடு முழுவதும் 150 தனியார் ரயில்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் ரயிலிலேயே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
credit ns7.tv