புதன், 23 அக்டோபர், 2019

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை...!

credit ns7.tv
Image
மேட்டூர் அணை, நடப்பாண்டில் 3-வது முறையாக அதன் முழு கொள்ளளவை இன்று எட்டியுள்ளது. 
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாகத் திகழும் மேட்டூர் அணை, 46 வது ஆண்டாக கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, செப்டம்பர் 24ஆம் தேதியும் மேட்டூர் அணை நிரம்பியது. இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 3-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. 
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு தற்போது 26 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 27 ஆயிரம் கனஅடி நீரும், கால்வாய் பாசனத்திற்காக 500 கனஅடி நீரும் விடுவிக்கப்படுகிறது. அணையிலிருந்து 27 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.