ஞாயிறு, 13 அக்டோபர், 2019

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு...!

credit ns7.tv
Image
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் எந்தெந்த பதவிகளுக்கு போட்டியிடலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையிலும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கும் அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.