செவ்வாய், 29 அக்டோபர், 2019

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு ஜம்மு காஷ்மீரில் ஆய்வு...!

credit ns7.tv
Image
இந்தியா வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு ஜம்மு காஷ்மீர் சென்று இன்று  பார்வையிடவுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை அந்த குழு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. இந்த சந்திப்பின் போது காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது, சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்நிலையில் ஐரோப்பிய குழு இன்று காஷ்மீர் சென்று, அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து கேட்டறிய உள்ளனர்.
இதனிடையே ஐரோப்பிய குழு ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீநகர் அருகே சோபோர் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி நடத்திய தாக்குதலில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தாக்குதல் நடைபெற்ற பகுதியை பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.