தேர்தல்களில் வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்கும் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மட்டுமே தற்போது தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க உரிமை வழங்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சகம், 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இனிவரும் தேர்தல்களில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 13-ஏ படிவம் மூலம் தங்களின் வாக்குகளை தபால் மூலம் அளித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றலாம்.
credit ns7.tv