சனி, 12 அக்டோபர், 2019

மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு...!


Image
சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும், ஐந்து ரதம், குடைவரை கோயில்களை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். 
சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் 2 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு வந்திறங்கிய ஜி ஜின்பிங்கை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்துக்களை கொடுத்து வரவேற்றனர். 
இதை தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்காக விமான நிலையத்திலேயே பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பரத நாட்டியம், நாதஸ்வர இசை மூலம், சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில், ஒவ்வொரு குழுவினரும், தனித்தனியே கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஒவ்வொரு குழுவின் முன்பாகவும் சிறிது நேரம் நின்று, அவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளை, சீன அதிபர் ஜி ஜின்பிங் கண்டுகளித்தார். மேலும், கைகளை அசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து, அவர் தமது காரில் ஏறி, விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். அப்போது, அங்கு பள்ளி மாணவர்கள் இந்திய மற்றும் சீன தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியவாறு, வரவேற்பு அளித்தனர். 
மாணவர்களின் வரவேற்பை ஏற்றவாறு, சீன அதிபர் ஜீ ஜின்பிங், சென்னை விமான நிலையத்தில் இருந்து, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, வழிநெடுகிலும் தமிழக கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதற்காக, அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஒரு இடத்தில் மேடை அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. பின்னர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
இதேபோல் கோவளத்தில் தங்கியிருந்த பிரதமர் மோடி அங்கிருந்து மாமல்லபுரம் சென்றார். சீன அதிபரை வரவேற்பதற்காக அவர் அங்கு முன்னதாகவே சென்றார். அபபோது அவர் தமிழக பாரம்பரிய முறைப்படி பட்டு வேட்டி சட்டை மற்றும் தோளில் துண்டு அணிந்து சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அப்போது இருவரும் அங்குள்ள அர்சுணன் தபசு புராதான சின்னம் முன்பாக சிறிது நேரம் உரையாடினர்.
பின்னர் அவர்கள் மாமல்லபுரத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படும் குடைவரை கோயில்கள் மற்றும் வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட்டனர். அப்போது  இருவரும் கைகளை கோர்த்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். தொடர்ந்து ஐந்து ரதத்தை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் இருவரும் அமர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடினர். அப்போது பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் இளநீர் பருகினர்.
பின்னர் அங்கிருந்து இருவரும் கடற்கரை கோயில் சென்றனர். மின் ஒளியால் வண்ண ஒளியில் கோவில் ஜொலித்தது. அங்கு கோயிலின் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி, ஜி ஜின்பிங்குக்கு எடுத்துரைத்தார்.
இதை தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும்  அதிகாரிகளை பிரதமர் மோடி, ஜி ஜின்பிங்கிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.
பின்னர் அங்கு அமைப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் அமர்ந்த இருவரும், கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இதில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பரத நாட்டியம், கதகளி உள்ளிட்ட நடனங்களை கலைஞர்கள் ஆடினர். இதை தொடர்ந்து ராமாயணத்தை நடனமாக ஆடிக்காட்டினர். அவற்றை பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

credit ns7.tv