இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அச்சுறுத்தும் வகையில் இல்லை என்கிறது ஐ.நா. நடத்திய கணக்கெடுப்பு.
ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் மக்கள் தொகை அதிகரிக்கும் விகிதம் குறைந்துக்கொண்டே வந்துள்ளது. சமீபத்தில் ஐ.நாவின் மக்கள்தொகை பிரிவு கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1 சதவீதம் என்ற அடிப்படையில் தான் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவில் கருத்தரித்தல் வீதம் குறைந்தது தான் என்கிறது இந்த கணக்கெடுப்பு.
1971ல் சராசரியாக ஒரு பெண்ணுக்கு 5.2 ஆக இருந்த கருத்தரித்தல் வீதம் தொடர்ந்து சரிந்து 2017ம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 2.2 ஆக உள்ளது. மத்திய நிதித்துறையின் கணிப்புபடி இந்தியாவின் கருத்தரித்தல் வீதம் 2021ல் 1.8 ஆக குறையும். அதே நேரத்தில் இந்த ஆய்வில் 10-11 ஆண்டுகள் வரை கல்வி அறிவு கொண்டுள்ள பெண்களின் கருத்தரிப்பு வீதம் 1.99 ஆக உள்ளது அதுவே கல்வி அறிவு இல்லாத பெண்களின் கருத்தரித்தல் வீதம் 3.07 ஆக உள்ளது.
இது திட்டமிட்ட குடும்பத்தை உருவாக்க இந்தியாவில் ஏற்கனவே அமலில் உள்ள குடும்ப கட்டுபாடு சட்டங்களை தாண்டி பெண்களுக்கான கல்வியும் சமூகம் மேம்பாடும் அவசியம் என்பதை உணர்த்துகிறது. எனவே அரசு எத்தனை குழந்தைகள் பெற வேண்டுமென தனி மனித உரிமையில் தலையிடாமல் சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்கிறது இந்த ஆய்வு.