திங்கள், 21 அக்டோபர், 2019

பல தலைமுறைகளாக போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்!

Image
கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மூன்று கிராம மக்கள் பல தலைமுறைகளாக பவானி ஆற்றை கடக்க ஆபத்தான பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளன அம்மாபாளையம், ராக்கிணாம்பாளையம், கணேசன்புதூர் ஆகிய கிராமங்கள். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. போதிய சாலை வசதியில்லாததால், இந்த கிராமங்களுக்கு இதுவரை பேருந்துகள் இல்லை. எனவே, பவானி ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள அந்தியூர் - சத்தியமங்கலம் சாலையை அடைந்து அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அல்லது சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று மேவானி என்ற ஊரை அடைந்து பேருந்து பிடிக்க வேண்டும்.

பவானி ஆற்றை இக்கிராமத்தில் இருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பரிசலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். விளைபொருட்களை அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகளும் வேதனைப்பட்டு வருகின்றனர். இங்குள்ள ஆரம்பப்பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்களும் தினமும் உயிர் பயத்துடன் பரிசலில் வந்து செல்கின்றனர். 

கடந்த காலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்ல ஆற்றைக் கடக்க முயன்ற கர்ப்பிணிகள், வயதான நோயாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பவானி ஆற்றைக் கடக்க பாலம் கட்டித் தர வேண்டும் என்ற தங்களது பல ஆண்டுகால கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள். பவானி ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைக்கள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதில் ஒன்றை அம்மாபாளையத்தில் அமைத்து அதில் போக்குவரத்துக்கு வழிவகை செய்யவேண்டும் என்றும் இக் கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 
credit ns7.tv